பாபு ஆண்டனி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வில்லன் வேடங்களில் நடித்துவருபவர். இவர் வில்லாளன்' படத்தின் மூலம் கதாநாயகனாகிறார்.
இந்தப் படம் மகாபாரதத்தை மையமாகக் கொண்டது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக இருந்த துரோணாச்சாரியரும் அவரது மகன் அசுவத்தாமனும் ஓர் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் இருவரையும் துரோணரையும் காப்பாற்றி துரோணரின் பிரதான சீடன் என்ற பெயரைப் பெறுகிறான் அர்ஜுனன். குருபக்தியில் அர்ஜுனனையும் மிஞ்சும் ஏகலைவனை வேடன் என்பதால் சீடனாக ஏற்க மறுக்கிறார் துரோணர். அதனால் துரோணரைப் போலவே ஒரு சிலையை உருவாக்கி அதன் மூலம் சிறந்த வில் வித்தைகளைக் கற்று பகைவர்களை வெல்கிறான் ஏகலைவன்.
இந்தப் பின்னணியைக் கொண்டு துரோணர், அர்ஜுனன், ஏகலைவன் ஆகியோரைப் பற்றி வித்தியாசமான கோணத்தில் அணுகும் விதத்தில் 'வில்லாளன்' கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பி. ராஜசேகரன் படத்தைத் தயாரித்து இயக்கும் இப்படத்தில் பாபு ஆண்டனி துரோணாச்சாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்மோகன், 'காதல்' சுகுமார், நீத்து, இந்து உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேரளத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
தமிழில் புராணப் படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வரவிருக்கும் இந்தப் படம் புராணக் கதைகள் இந்தக் காலத்தில் எடுபடுமா என்பதைக் காட்டக்கூடும்.
|