தமிழ் சினிமாவில் ஜோடி சென்ட்டிமென்டுக்கு மயங்குகிற விநியோகஸ்தர்கள் இப்போதும் இருக்கிறார்கள். வெற்றிப்பட ஜோடிகள் என்றால், கதையைக்கூடக் கேட்காமல் பணப்பெட்டியைத் திறக்கும் இவர்களுக்கு மீண்டும் ஒரு அல்வா செய்தி. பருத்தி வீரன் ஜோடி மீண்டும் இணைகிறது. ப்ரியாமணி தற்போது நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதைத் தவிர, மணிரத்னம் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சுராஜ் இயக்க, பருத்தி வீரன் தயாரிப்பாளர் வி. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில்தான் ப்ரியாமணிக்குக் காதல் வலை வீசப்போகிறார் கார்த்தி.
கிட்டத்தட்டப் பத்துக் கோடி கலெக்ஷன் என்றெல்லாம் பருத்தி வீரன் குறித்து பேசப்பட்டாலும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. லாபம் மொத்தமும் விநியோகஸ்தர்களையே சென்றடைந்ததாம். எனவே இந்தப் படத்திலாவது அவருக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கார்த்தி. ஒரு வகையில் ஞானவேல் ராஜாவும், கார்த்தியும் நெருங்கிய உறவினர்கள்.
அது இருக்கட்டும். பருத்தி வீரனில் சம்பள பாக்கி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய ப்ரியாமணிக்கு இந்த படத்தில் அந்தப் பாக்கியையும் சேர்த்துக் கொடுப்பார்களா?
கொசுறு: இந்தப் படத்தில் கார்த்திக்கு இரண்டு வேடங்கள், இரண்டு கதாநாயகிகள். இரண்டாவது கதாநாயகி ரெண்டு படத்தில் நடித்த அனுஷ்கா
|