30 ஆம் தேதி வழக்கம் போல திரையரங்கங்கள் இயங்கும்

May 16, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 16 (டி.என்.எஸ்) தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால், வரும் மே 30 ஆம் தேதி முதல் திரையுலகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இடுபடப் போவதாகவும், எனவே அன்றைய தினத்தில் இருந்து திரையரங்கங்களும் இயங்காது என்றும் தெரிவித்திருந்தார்.


ஆனால் விஷாலின் அறிவிப்பையும், அவரது வேலை நிறுத்தத்தையும் நிராகரித்துள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, வரும் 30 ஆம் தேதி திரையரங்கங்கள் மூடப்பட மாட்டாது. வழக்கம் போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்கங்களும் இயங்கும், என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.