”லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” - ஐயோ பாவம் ரஜினி!

May 16, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 16 (டி.என்.எஸ்) தனது ஸ்டைல் மூலம் தமிழகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களை வசிகரித்த நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களில் அப்படி இப்படி என்று நடித்தாலும், பொது மேடைகளிலும் சிறப்பாகவே நடிக்க கூடியவர்.


கடந்த 30 ஆண்டுகளாக, வருவேன்...ஆனா வர மாட்டேன், அதெல்லாம் நமக்கு வேண்டாம், என்று அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்த ரஜினிகாந்த், தற்போது ரசிகர்களை அவராகவே அழைத்து அரசியல் பேசியிருப்பது, அவர் அரசியல்லு வரக்கூடும் என்ற பிம்பத்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவு ஆகியவை தமிழக அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப தாங்கள் தான் சரியான கட்சி என்று மார்தட்டும் பா.ஜ.க, அத்தகைய தகுதி தங்களிடம் இல்லை என்பதால், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களை முன்னிறுத்தி அதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வகையில் ரஜினிக்கு நெருக்கடியைக் கொடுத்து வந்த பா.ஜ.க தற்போது தான் நினைத்ததை ஓரளவு சாதித்து விட்டது.

பா.ஜ.க-வுக்கு வெளிப்படையாக ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் அது அவருக்கே எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தான், ரஜினிகாந்த் தற்போது தனது ரசிகர்களுடனான சந்திப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை தெரிவித்ததுடன், தான் அரசியலில் ஏமாற்றப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் எண்ட்ரி கொடுத்தாலே நேரடியாக முதல்வராகிவிடுவார்கள் என்ற நட்சத்திரங்களின் கனவு விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பால் சிதைந்து போய்விட்டது. அதுமட்டுமல்ல, தற்போதைய தமிழக இளைஞர்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஓட்டு போடும் கட்டத்தையெல்லாம் தாண்டி விட்டதுடன், சமூகத்தில் நடக்கும் சில குறைபாடுகளை அவர்களே தட்டிக் கேட்பதுடன், அதை மற்றவர்களுக்கும் வேகமாக தெரியப்படுத்தி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், தற்போது அவர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கும் ரசிகர்களில் பலர் அவருக்கு ஓட்ட போட யோசிப்பார்கள் என்பதே தற்போதைய நிலைவரம் என்றாலும், பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாகவே ரஜினிகாந்த், தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாரே தவிர, அவருக்கு தமிழகத்தின் மீதோ அல்லது தமிழக மக்கள் மீதோ எந்தவித அக்கறையும் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மொத்த தமிழ் திரையுலகமே ஆதரவு குரல் கொடுத்துவந்த போது ரஜினிகாந்த் எங்கே போயிருந்தார்? காவிரி விவகாரத்தில் பெங்களூரில் தமிழர்கள் மீதும், அவர்களது சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை? தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டம் குறித்து ஏன் ரஜினி கருத்து கூறவில்லை? இப்படி பல கேள்விகளை ரஜினியிடம் கேட்கும் தமிழக மக்கள், அவருக்கு ஓட்டு போடுவார்களா? என்ற கேள்வியை ரஜினி தன்னை தானே கேட்டுக்கொண்டால் நல்லது.

தற்போது ரஜினிகாந்தின் ரசிகர்களாக அவரை சந்திக்க வருபவர்கள் 50 வயதை கடந்தவர்களாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியான இளைஞர்கள் ஆதரவு இல்லாமல் தற்போதைய அரசியலில் ஒரு துரும்பை கூட ரஜினியால் நகர்த்த முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

மொத்தத்தில் “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” என்ற ரஜினியின் வசனம் படங்களுக்கு மட்டுமே பொருந்தும், அரசியலுக்கு பொருந்தாது, என்பதை அவர் உணர்ந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், தமிழக மக்கள் அவரைப் பார்த்து “ஐயோ பாவம்” என்று அனுதாபப்படும் நிலைதான் ஏற்படும் என்று, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.