‘உரு’ திரைப்பட விமர்சனம்

June 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஜூன் 19 (டி.என்.எஸ்) கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படமான ‘உரு’ படத்தை அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த இயக்க, வய்யம் மீடியாஸ் சார்பில் வி.


பி.விஜி தயாரித்துள்ளார்.

எழுத்தாளரான கலையரசன், திகில் கதை எழுதுவதற்காக மேகமலையில் உள்ள தனது நண்பரது கெஸ்ட் ஹவுஸுக்கு செல்கிறார். அங்கு அவர் எழுதும் கதையில் வரும் சம்பவங்கள் நிஜத்திலும் நடக்க, கதையில் வரும் முகமூடி அணிந்த சைக்கோ கொலைகாரன் நிஜத்திலும் வருவதோடு, கலையரசனை கொலை செய்துவிடுகிறார். கலையரசனை தேடி அந்த இடத்திற்கு வரும் அவரது மனைவி தன்ஷிகாவையும் அந்த சைக்கோ கொலை செய்ய முயற்சிக்கிறார். சைக்கோவிடம் இருந்து தன்ஷிகா தப்பிக்க பலவிதத்தில் முயற்சி மேற்கொண்டாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிய, திடீரென்று அந்த வீட்டில் கலையரசன் மயங்கிய நிலையில் கை கால்கள் கட்டப்பட்டு இருக்கிறார்.

கலையரசனை மீட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கும் தன்ஷிகா, சட்டென்று கலையரசனை வீட்டுக்கு வெளியே தள்ளிவிட, அப்போது தான் தெரிகிறது, அந்த சைக்கோவே கலையரசன் தான் என்று. கலையரசனை கொலை செய்ய முயன்ற முகமூடி சைக்கோ கலையரசனாக எப்படி இருக்க முடியும்? என்ற கேள்வியோடு, கலையரசன் எதற்காக தனது மனைவி தன்ஷிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்? என்ற இரண்டு கேள்விகளும், இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட விமானம் போல, படத்தை அதிவேகத்தில் நகர்த்த, முடிவு என்னவாக இருக்கும், என்று படம் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் நடிகர்களில் ஒருவரான கலையசரன், ஆரம்பத்தில் எழுத்தாளராக, சரியான கதை எழுத முடியாமல் திண்டாடுவதிலும், பிறகு சைக்கோ கொலையாளியாக வலம் வருவதிலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தின் இன்னோரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்துள்ள தன்ஷிகா, ஆக்‌ஷன் காட்சிகளில் ஆண்களுக்கு நிகராக ரியலாக நடித்திருக்கிறார்.

ஒரே வீட்டில் முழு கதையும் நகர்ந்தாலும், கலையரசன் - தன்ஷிகா இடையிலான துரத்தலை வெவ்வேறு வடிவத்தில் காட்டிய ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் மற்றும் இசையமைப்பாளர் ஜோகனின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கும் சஸ்பென்ஸ் இடைவேளையையும் தாண்டி தொடர்வது ரசிகர்களை சற்று கடுப்பேற்றினாலும், சஸ்பென்ஸ் என்னவென்று சொல்லும் இயக்குநர், கற்பனை கதாபாத்திரங்களை நிஜ கதாபாத்திரங்களுடன் தொடர்புபடுத்திய விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

சாதாரணமான கான்சப்ட்டாக இருந்தாலும், படத்தின் திரைக்கதையும், திருப்புமுனை காட்சிகளும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. கலையரசன் ஹீரோவாகவும், தன்ஷிகாவை ஹீரோயினாகவும் காட்டும் இயக்குநர் விக்கி ஆனந்த், அவர்களையே வில்லனாக்கி அமைத்திருக்கும் காட்சிகள் எதிர்ப்பார்க்காத ட்விஸ்டாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்க்க வேண்டும் என்றால், அதற்கு சரியான படம் இந்த ‘உரு’.

ஜெ.சுகுமார்