ஐபிஎல் : பெங்களூரை வீழ்த்தியது புனே

April 17, 2017, Chennai

Ads after article title

புனே, ஏப்.17 (டி.என்.எஸ்) ஐபில் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரைசிங் புனே அணிகள் மோதின.


இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. புனே அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் திரிபாதி 31, ரகானே 30 ரன்கள் எடுத்தனர். அதேபோல், கேப்டன் ஸ்மித் 28, தோனி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

162  என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர் மன் தீப் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் இணைந்து ரன்களை சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து டிவில்லியர்சும் அவுட் ஆனதால், பெங்களூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இதையடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்த அவுட் ஆக, இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புனே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

புனே அணியில் பென்ஸ் ஸ்டோக் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். உனட்கட் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். 

5 போட்டிகளில் விளையாடியுள்ள ரைசிங் புனே அணி 2வது வெற்றியை பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்கள் அணி தனது 4-வது தோல்வியை பதிவு செய்தது.