என்னை விரட்டினால் இமயமலைக்கு தான் போவேன் - ரஜினிகாந்தின் இறுதிப் பேச்சு

May 19, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 19 (டி.என்.எஸ்) கடந்த 15 ஆம் தேதியில் இருந்து ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வை நடத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த், நிகழ்வின் முதல் நாளில் அரசியல் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.


ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் எதிர்ப்பும், ஆதரவும் என்று தமிழகத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து கூறி வந்தார்கள்.

இந்த நிலையில், நிகழ்வின் இறுதி நாளான இன்று (மே 19) மீண்டும் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த், “நான் பச்சை தமிழன், இங்கிருந்து என்னை போக சொன்னால் நான் இமயமலைக்கு தான் போவேன்” என்று கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், “ஒழுக்கம் தான் வாழ்வில் முக்கியம் அதை ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டும். நிகழ்வை ஒருங்கிணைத்த காவல்துறை உட்பட அனைவருக்கும் நன்றி. 

ஊடகங்கள் என்னை விரட்டுகிறார்கள். நான் பேசினால் அது சர்ச்சை மற்றும் விவாதமாக மாறுகிறது. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். சமூக வலைதளங்களில் விமர்சிப்பது வேதனையாக உள்ளது.                      

24 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன் 40 வருடத்திற்கும் மேலாக தமிழகத்தில் இருக்கிறேன். தமிழர்கள் தான் என்னை தமிழர் ஆக்கினார்கள், நான் பச்சைத் தமிழன் தான். என்னை இங்கிருந்து போ என்றால் இமயமலை தான் போவேன்.                 

சீமான் ஒரு போராளி அவரின் கருத்துகளை கேட்டு பிரமித்திருக்கிறேன். அரசியலில் சிஸ்டம் கெட்டு போய் இருக்கிறது. எதிர்ப்பு இருந்தால் தான் நாம் வளரமுடியும்.

ரசிகர்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும். போர்(அரசியல்) வரும்போது பார்த்துக்கொள்வோம்.” என்று பேசினார்.

ரஜினிகாந்தின் இத்தகைய பேச்சு, தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் வந்தால், ரஜினிகாந்த் தனது புதிய கட்சியுடன் களம் இறங்குவார், என்பதை அழுத்தமாக பதிய வைத்துள்ளது, என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.