ஊக்கம் அளித்த விஷால் - 5 படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்

April 21, 2017, Chennai

Ads after article title

சென்னை, ஏப்.21 (டி.என்.எஸ்) எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அமலா பால் ஹீரோயினாக அறிமுகமான ‘வீர சேகரன்’, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘இருவர் உள்ளம்’, ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களை தயாரித்த துவார் ஜி.


சந்திரசேகர், தயாரித்துள்ள ஐந்தாவது படம் ‘பாக்கணும் போல இருக்கு’.

பரதன், அன்சிபா ஹீரோ ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்க, கஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். 

காமெடி கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ஏற்கனவே சில முறை ரிலீஸாவதாக இருந்து, பிறகு சரியான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் வெளியாகமால் போய்விட்டது.

இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகிகள் தரமான திரைப்படங்களுக்கு எந்தவிதத்திலும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதிலும், அவை உரிய நேரத்தில் ரிலீஸாக வேண்டும் என்பதிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.

இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷாலை, மரியாதை நிமித்தமாக தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் சந்தித்த போது, அவர் தயாரித்த படங்கள் குறித்து பேசிய விஷால், ‘பாக்கணும் போல இருக்கு’ படம் ஏன் வெளியாகவில்லை, என்று கேட்டுள்ளார். பிறகு திரையரங்குகள் கிடைக்காத விஷயத்தை துவார் ஜி.சந்திரசேகர் சொல்ல, உடனே படத்தை ரிலீஸ் செய்யுங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன், என்று விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது ஊக்கத்தின் பேரில் படத்தை ரிலீஸ் செய்வது மட்டும் இன்றி, மேலும் தொடர்ந்து 5 படங்களை தயாரிக்கவும் துவார் ஜி.சந்திரசேகர் முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல், ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு இப்படத்தில் பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அருள் தேவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டான நிலையில் “உன் ரெட்டை சடை கூப்பிடுது முத்தம்மா...” என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடலாக மாறியுள்ளது.

கஞ்சா கருப்பு - சூரியின் கலக்கல் காமெடி, பரதன் - அன்சிபா ஜோடியின் காதல், தாளம் போட வைக்கும் பாடல்கள், பரவசமடைய செய்யும் பிரம்மாண்ட காட்சிகள் என்று நூறு சதவீத பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘பாக்கணும் போல இருக்கு’ லேட்டாக வெளியானாலும் ரசிகர்களின் லைக்கை பெறும் படமாக இருக்கும்.