இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை

April 18, 2017, Chennai

Ads after article title

Chennai, April 18: ஈரோடு மாவட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசாமி- சின்னாத்தா தம்பதியருக்கு மகனாக பிறந்தார் தீரன் சின்னமலை.


அவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். 

கொங்கு நாடு, மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆட்சியிலிருந்த போது அந்நாட்டின் வரிபணத்தை அண்டை நாட்டிற்கு சங்ககிரி வாயிலாக மைசூர் எடுத்து செல்வது வழக்கம். ஒரு நாள் தனது நண்பர்களோடு தீர்த்தகிரி அந்த வரிபணங்களை தடுத்து ஏழை மக்களுக்காக வழங்கினார். ”சென்னிமலைக்கும்- சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக உங்கள் மன்னரிடம் கூறு”
என்று முதன்முதலாக எதிர்த்து நின்றார்.  தீர்த்தகிரி அவர்கள் தீரன் சின்னமலை ஆனது இங்கு தான். 

1782ஆம் ஆண்டு மைசூர் மன்னர் ஹைதர் அலி மரணத்திற்கு பிறகு அவது புதல்வர் திப்பு சுல்தான் மைசூர் மன்னரானார். ஆங்கிலேயே ஆதிக்கத்தை சின்னமலையும் விரும்பவில்லை திப்பு சுல்தானும் விரும்பவில்லை. இருவரும் கூட்டணி அமைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தனர். சித்தேஸ்வரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய மூன்று போர்களிலும் இவர்கள் கூட்டணி ஆங்கிலேய படைகளை சிதறடித்தது. இந்த கூட்டணியின் தொடர் வெற்றிகளை பொருத்து கொள்ளுமா ஆங்கிலேய அரசு? புதிய யுத்த திட்டங்களோடு நான்காவது யுத்தத்தை எதிர் கொண்டது. இம்முறை நெப்போலியன் உதவியோடு தீரன் சின்னமலை- திப்பு சுல்தான் கூட்டணி போரை எதிர் கொண்டது. ஆனால் நான்காவது போரில் திப்பு சுல்தான் யுத்தத்தில் வீரமரணம் எய்தினார். 

திப்பு சுல்தான் மரணத்திற்கு பழிவாங்க வேண்டும் என்று கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் காத்திருந்தார் தீரன் சின்னமலை. பிரெஞ்சுக்காரர்களின் உதவியோடு பீரங்கிகளை போன்ற ஆயுதங்களை தயார் செய்தார். திப்பு சுல்தான் படையின் முக்கிய வீரர்களான தூண்டாஜிவாக்- அப்பாச்சி போன்ரோரை தன்னோடு இனைத்து கொண்டதோடு தன்னை ஒரு பாளையத்துகாரராக  அறிமுகம் செய்து கொண்டு பாளையகாரர்களை ஒன்றினைத்தார். 

பிரெஞ்சுக்காரர் கர்னல் மாக்ஸ் வெல் தலைமியிலான ஆங்கிலேயேர்களை பவானி- காவிக்கரையில் எதிர்த்து வென்றார். பின்னர் சென்னிமலைக்கும்- சிவன்மலைக்கும் இடையில் நடந்த போரில் ஆங்கிலேயர்களை வென்றார். தொடர்ந்து அறச்சலூரில் கர்னல் ஹாரிஸின் படையை குண்டுகள் வீசி தகர்த்தார். 

மாவீரன் தீரன் சின்னமலையை யுத்தத்தில் வீழ்த்த முடியாத ஆங்கிலேய அரசு அவரை சூழ்ச்சியால் வீழ்த்தியது. அவரது சமையல்காரன் மூலமாக தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தது ஆங்கிலேய அரசு. சங்ககிரி கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் தூக்கிலிட்டது பிரிட்டிஷ் அரசு. யாருமே வீழ்த்த முடியாத வீரரை சூழ்ச்சியால் வீழ்த்தினாலும் அவரது மரணம் வீரமரணமே.

2012ஆம் ஆண்டில் சங்ககிரியில் தீரன் சின்னமலைக்கு நினைவு சின்னம் அமைக்கபடும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சென்னையில் தீரன் சின்னமலையின் உருவ சிலையை அமைத்தது தமிழக அரசு.