தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
டாலர் வீழ்ச்சி ஏன்-எப்படி? செய்திக் கட்டுரை
--  
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு டாலருக்கு ஐம்பது ரூபாய் மதிப்பு இருந்தது. ஆனால் இன்று, அது 39 ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஒரு காரணம். ரூபாயின் அடிப்படை மதிப்பு உயர்ந்துள்ளது. இதற்கு ஏராளமான உள்நாட்டு காரணங்கள் உள்ளன. நமது ஏற்றுமதி உயர்ந்துள்ளது. பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. அதோடு அந்நிய முதலீடு பெருகியுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரையில், நிலைமை தலைகீழாக உள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை உயரஉயர, அமெரிக்காவில் பெட்ரோல் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது. மற்ற பொருட்களுக்கும் விலை விண்ணை எட்டியது. இதோடு வேறு பல சிக்கல்களும் அமெரிக்காவில் உருவாயிற்று.

கடன் பெற்றவர்கள் உரிய நேரத்தில் அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அமெரிக்காவில் ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்தனியாக, கடன் வாங்கக்கூடிய மதிப்பீட்டு எண் உள்ளது.

ஃபேர் ஐசக் கார்ப்பரேஷன் (எஃப் ஐ சி ஓ) எனும் ஒரு நிறுவனம்தான் இந்த மதிப்பீட்டு எண்ணை கணிப்பதில் வல்லுநர்கள். இதுபோன்று இன்னும் ஒரு சில நிறுவனங்கள் உள்ளன என்றாலும், ஃபைகோ சொல்வதுதான் வேதவாக்கு. ஒவ்வொருவருக்கும் 500 முதல் 850-வரை மதிப்பீட்டு எண் கொடுக்கிறார்கள். 620 என்பது சராசரி. அதற்குக் கீழே எண் இருந்தால், வழக்கமாக கடன் கொடுக்க மாட்டார்கள். வங்கிகளிடம் பணம் தேங்கியிருந்ததனால், வழக்கமாக கடன் கொடுக்காத நபர்களுக்கும் கடன் வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது இரண்டாம்தர கடன்களை வழங்கினார்கள். இதுதான் சப் பிரைம் கடன் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கடன்களினால், கடன் கொடுப்போருக்கும், கடன் பெறுவோருக்கும் ஆபத்து உள்ளது. எப்படி? இத்தகைய கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் சிறந்த வாடிக்கையாளர்கள் அல்ல. வட்டி அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு பளு. அதோடு ஏற்கனவே கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருப்போர், அதிக வட்டி கொடுக்கவேண்டியிருப்பதால், மேலும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இப்படி இது ஒரு இருமுனைக் கத்தி. கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு வேறுவழியில்லை. திருப்பிச் செலுத்துவார்களா? மாட்டார்களா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், எப்படியேனும் வருமானம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இரண்டாம்தர கடன்களை கொடுக்கிறார்கள். கொடுத்துவிட்டு திரும்பி வருமா? வராத என்ற சந்தேகத்தில் இருக்கிறார்கள்.

2006-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எண்பது கோடி டாலர், அதாவது நாலாயிரம் கோடி ரூபாய், இத்தகைய கடன்களாக வழங்கப்பட்டது. 2007-ல் 120 கோடி டாலர் கொடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான கடன் திரும்பி வரவில்லை. இதுதான் அமெரிக்காவில் பொருளாதாரச் சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணம்.

இதன் விளைவாக பெரிய வங்கிகள் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டன. வாராக் கடன்கள் பெருகின. சிறிய அடமான நிறுவனங்கள் மூடப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டது. பல நிறுவனங்களும், நபர்களும் திவால் ஆனார்கள். இதன் எதிரொலி, பங்குச் சந்தையிலும் பிரதிபலித்தது. அமெரிக்க பங்குச் சந்தை பாதிக்கப்பட்டதால், உலகெங்கிலும் பங்குச் சந்தைகளில் அதன் எதிரொலி தெரிந்தது.

இந்த நிலைமையிலிருந்து அமெரிக்கா இன்னமும் மீளவில்லை. ஆனால் இந்தியாவில் இதனால் நெருக்கடி ஏற்பட விடமாட்டோ ம் என்று ரிசர்வ் வங்கி உறுதியாக தெரிவித்திருக்கிறது. இங்கும் வாராக் கடன்கள்-குறிப்பாக, வீட்டுக் கடன்கள், வீட்டு மனைக் கடன்கள் ஆகியவை அதிகரித்துள்ளன. இருப்பினும் நிலைமையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதற்கென ஒரு குழுவையும் அமைத்திருக்கிறார்கள். பொருளாதாரம் உலக மயமாக்கப்படும்போது இத்தகைய சிக்கல்கள் எழக்கூடியவைதான். ஆனால் இத்தகைய சிக்கல்களினால் நமது அடிப்படை பொருளாதார வலு பாதிக்கப்படாமல், பார்த்துக் கொள்வதுதான் நமது புத்திசாலித்தனம்.

ஹெச். ராமகிருஷ்ணன்

Published on 11th Dec, 2007


Recommend this page

Mail us your feedback

 
மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera