தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Personality
 in
   
 
 
 
 
 
இந்த வார பிரபலம்.....5
video

Part I  Part II  Part III  Part IV

Sivakumarராமகிருஷ்ணன்: உங்களை ரொம்ப துக்கப்படுத்தின... அழவைத்தச் சம்பவம்னு எதைச் சொல்றீங்க..?!

சிவகுமார்: அழவச்ச சம்பவம் ரெண்டு சம்பவம். ஒண்ணு வந்து.... முதல் மரணம். அப்ப எனக்கு நாலு வயசு. பள்ளிக்கூடத்துக்கு போகல. என்னுடைய அண்ணன் ஒருத்தன் பொள்ளாச்சில மாமா வீட்ல தங்கி படிச்சிட்டிருந்தாரு. எம்ஜிஆர் மாதிரி இருப்பாரு ஆளு கலர். அதுக்கு முந்தி அண்ணனை பார்த்த ஞாபகம் இல்ல. பொள்ளாச்சியிலேயே அதிக நாள் இருந்து பின்னால் இங்க வந்தவரு.

மாமா சொன்னாரு நாளன்னிக்கு காலேஜ்ல சேரணும். என்னோட இப்பவே புறப்பட்டு வான்னு சொன்னாரு. இல்ல இன்னைக்கு ஒருநாளைக்கு பாட்டி கூட இருந்துட்டு வர்றேன். அப்படீன்னு அண்ணா சொன்னான். அங்க தங்கினான். காலைல சந்தைக்கு வண்டில புறப்பட்டு போனான். அந்த வண்டிக்கு மூட்டையெல்லாம் இவன் கூடமாட தூக்கி விட்டிருக்கான். பிறகு அத்த வீட்டுக்கு போயி கேல்வரகு களி செஞ்சிருக்காங்க. அத சாப்பிட்டிருக்காரு. வேலையெல்லாம் பண்ணியிருக்காரு. மத்தியானம் பன்னிரெண்டு மணிக்கு லேசா ஜொரம் வந்திருக்கு. பீவர் வந்தவுடனே....... ஒரு மணிக்கு பார்த்தா இரண்டு காலும் .இணையற பகுதியில ஒரு கட்டி வந்தது. அது பிளேக் நோயினுடைய அறிகுறி. வேப்பிலை பத்து அரைச்சி போட்டாங்க. இரவு ரெண்டரை மணியிருக்கும். அது தேய்பிறை நாட்கள். தேய்ந்துபோன நிலா இலந்தை மரம் வழியாக லேசாக எட்டிப்பார்க்குது. அந்த மரத்துல ஒரு காகம் கூடு கட்டியிருக்குது. அது அப்படியே விலகிப் பார்க்குது. திடீர்னு, "ஐயோ ராசா என்னை விட்டு போயிட்டேயேய்யா-ன்னு சத்தம் கேட்குது. நாலு வயசு பையன். எனக்கு ஒண்ணும் புரியல. திடீர்னு முழிச்சி பார்த்து தவழ்ந்துகிட்டே வீட்டுக்குள்ள போனேன். போனோம்னா ஒரு அகல் விளக்கு வெளிச்சம்.
எங்க அம்மாவுக்கு சுருட்ட முடி. இந்த அகல் விளக்கு ஒளியில எங்க அம்மாவுடைய நிழல் சுவத்துல ஒரு பெரிய பேய் மாதிரி இருந்தது. தலை முடி சுருட்டை சுருட்டையா இருக்கு. இந்த பையனுக்கு பத்து போடறதுக்கு பயன்படுத்தின சின்ன கொழவிக்கல்லால எங்கம்மா தன்னுடைய நெத்தியையே அடிச்சுகிட்டபோது ரத்தம் வெளிய வந்தது.

விளக்கு. சுருட்டை முடி. பேய் மாதிரி நிழல். ரத்தம் வழிந்து கொண்டிருக்கு. ஒரு ஆள் நீண்டு குப்புற படுத்திருக்கான். பாத்து பயந்து நடுங்கி, அக்காகிட்ட என்னக்கான்னு கேட்டேன. அண்ணன் செத்துப்போயிட்டாண்டான்னாங்க. செத்துப்போயிட்டாங்கன்னா என்ன தெரியும் நாலு வயசு பையனுக்கு? எல்லாரும் அழுதாங்க. நானும் அழுதேன். உடனே மாமா ஒருத்தர் வந்து என்னை தோலில் போட்டுட்டு தூங்க வச்சாரு. விடிந்து மறுநாள் காரியம் எல்லாம் முடிச்சிட்டாங்க. அம்மாகூட ஒரு 10, 11 மணிக்கு தோட்டத்து பக்கம் போகும்போது சுடுகாட்டுல நீளமா ஒரு மண்ணு தோண்டி வரப்பு மாதிரி போட்டிருந்தாங்க. என்னமா இதுன்னு கேட்டேன். அதாண்டா உங்க அண்ணன் சண்முகம் அப்படின்னாங்க. அம்மா அழுதாங்க. ஒரே அழுகை. நானும் அழுதேன். மொத மொத அழுதது அதான். (கண்ணீர்விட்டு அழுதார் பேட்டியின் போதும்) என்னுடைய ஞாபகத்தில் படிந்திருக்கும் முதல் அழுகை அது.

அதுக்கப்புறம் அதே மாதிரி சம்பவம்னு சொல்லணும்னா..... இங்க என் சகோதரி பொண்ணை நான் எடுத்து வளர்த்தேன். அத எஸ் ஐ ஈ டி காலேஜ்ல படிக்க வச்சேன். அதுக்கு படிப்பு சரியா வரல. வீட்ல இருந்து என் கால்ஷீட் எல்லாம் பார்த்துக்கிட்டு கூடமாட துணையா இருந்திச்சி. அந்த பொண்ணு வந்து ஒரு ஆசைல பிரண்டு கொடுத்த புடவை கட்டுகிட்டு சமையல் செஞ்சிகிட்டிருக்கும்போது, நைலக்ஸ் புடவை அடுப்பில பட்டு, இடுப்பு வரைக்கும் தீ பத்தி ஜி ஹெச்ல சேர்த்தாங்க. அப்ப நான் பட்டிக்காட்டான் படப்பிடிப்பில் இருந்தேன். சாயந்திரம் ஆறு மணிக்கு தகவல் வந்தவுடன் நானும் புறப்பட்டு வந்தேன். ஜி ஹெச் போகும்போது நம்ம செளந்தரா கைலாசமுடைய மாப்பிளைதான் அங்க டாக்டரா இருந்தாரு. கூட அது ஒரு பயர் ஆக்ஸிடெண்ட் வார்டு. அதுக்குள்ள போனா ஒரு நரகமா இருந்தது.

என்ன டாக்டர் பொசிஷன்னு கேட்டேன். கிட்னியெல்லாம் பர்ன் ஆயிடுச்சி. பொழைக்கறது கஷ்டம். பேரண்ட்ஸுக்கு தகவல் கொடுத்துடச் சொன்னாங்க. உடனே நான் தந்தி அடிச்சி அக்காளையும், மச்சானையும் புறப்பட்டு வரச்சொன்னேன். காலைல வந்து சென்ட்ரல் ஸ்டேசன்ல இறங்கி, நேரா ஆறரை ஏழு மணிக்கு, பக்கத்துல ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வந்தாங்க. உள்ளபோய் பத்து படுக்கை தாண்டி பதினோறாவது பெட்டுல அதுதான் ஜானகி. Sivakumarபடுத்திருக்கு அப்படீன்னேன்.
என் அக்கா பார்த்துட்டு அப்படியே... ஐயோ எம் பொண்ணு செக்கச்செவேர்னு இருக்குமே........... இது கர்ரேர்ன்ணு இருக்குதே யாரையோ காட்ரேயேப்பான்னு சொல்லி அப்படியே மயக்கம்போட்டு கீழ விழுந்திருச்சி. அப்புறம் தண்ணியெல்லாம் தெளிச்சி ஒரு வழியா சமாதானம் பண்ணினோம். நான் முந்தினநாள் மத்தியானம் சாப்பிட்டது. நைட் பூரா விடிய விடிய ஒக்கார்ந்திருக்குறோம். என் மச்சான்கிட்டபோய் நான் குளிச்சிட்டு வர்றேன் மாப்பிளன்னு சொல்லிட்டு வீட்டுக்கு புறப்பட்டு போனேன். வீட்டுக்கு வந்து தண்ணி எடுத்து ஊத்தறேன்.... போன் வந்திச்சி. போயிடுச்சின்னாங்க. உடனே புறப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு வேகமா போனேன். வாசப்படியிலே மச்சான் நின்னுகிட்டிருந்தாரு. அவரு பள்ளிக்கூடமே போனது கிடையாது. அரைகுறையாத்தான் படிப்பாரு. நான் மேல வந்தவுடனே, அவரு என்ன சொன்னாருன்னா. அவருடைய இடத்துல நான் இருந்தா.. என்ன சொல்லியிருப்பேன்னா.. சண்டாளப் பாவி. நானாச்சுடா என் குழந்தைய படிக்க வைக்கிறேன், ஆளாக்குறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தியே! சண்டாளப் பாவி. கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு என்கால்ல சுத்தி வந்திட்டு இருந்திருக்குமே நாய் மாதிரி. மெட்ராஸுக்கு கூட்டிட்டு வந்து என் பொண்ணை கொன்னுட்டியேடான்னு அந்த ஆள் சொல்லியிருந்தார்ன்னா எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்.
அதுதான் ஒரு நியாயமான தாய் தந்தையோட உணர்ச்சி. ஆனா அந்த படிக்காத மனுஷன், "மாப்பிள ரெண்டு கொழந்தையும் தோள்ல போட்டு வளர்த்தீங்க. ஒரு கொழந்த போச்சி" அதாவது இந்த மண்ணுல எப்படிப்பட்ட மனுஷங்கள்லாம் இருக்காங்க. எந்த படிப்பு, எந்த ராமாயணம் படிச்சானா, மகாபாரதம் படிச்சானா தெரியுமா? தன்னுடைய குழந்தைய மச்சினன்கிட்ட கொடுத்து வளர்த்து, அந்த கொழந்த செத்துப்போகும்போது, மாப்பிள ரெண்டு கொழந்தையும் தோள்ல போட்டு வளர்த்தீங்க. ஒரு கொழந்த போச்சி அப்படீன்னு சொல்லும்போது.... எவ்வளவு உயர்ந்த மனுஷன் அந்த மனுஷன் அப்படீன்னு நினைச்சிப் பார்த்தேன்.

அதையெல்லாம்விட பெரிய விஷயம் என்னதுன்னா, மறுநாள் கொண்டு வந்து போஸ்ட் மார்ட்டம் எல்லாம் பண்ணினோம். கண்ணம்மாபேட்டையில கொண்டுபோய் அடக்கம் பண்ணினோம். புறப்பட்டு போகும்போது - அவருக்கு இன்னொரு பொண்ணு இருந்திச்சி. அந்த பொண்ணு வேகமா வந்து அவ அப்பனோட ஊருக்கு கிளம்பிச்சி. ஏய் நீ எங்க வர்ற? போ ஆத்தாவோட இங்க இருக்கச் சொல்லுன்னாரு.

ஐயா ராசா போதும்யா. ஒரு பொண்ணை கொண்டு வந்து சாகடிச்சது போதும்யா. உனக்கு இருக்கறது ஒண்ணே ஒண்ணு. அத மரியாதைக்கு கூட்டிட்டு போய்யா அப்படீன்னேன்.

சும்மாருங்க. அவ இங்கதான் இருக்கணும் அவளுக்கும் ஆயுசு கட்டையா இருந்துச்சின்னா என்னவேணா நடக்கட்டும். உங்களுக்கு இல்லாத புள்ள எனக்கு வேணாம் அப்படீன்னுட்டு, அந்த புள்ளைய உள்ளே தள்ளி கதவை சாத்திட்டு போயிட்டாரு.

இன்னைக்கு அந்த பொண்ணு பெருசாயி ஒரு எம்டெக் படிச்சவன கல்யாணம் பண்ணி ஒரு பையன், பொண்ணு பெத்து அவ நல்லாயிருக்கா. எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இந்த மண்ணுல இருக்காங்கன்னு நினைச்சி பாருங்க. என்னுடைய மச்சானுக்காக சொல்லல. படிப்பறிவு இல்லாட்டாகூட, இந்த மண்ணுல அப்படிப்பட்ட அற்புதமான மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

ராம : உங்களை மிகவும் மகிழவைத்த சம்பவம்...?

சிவ: மகிழ வைத்த சம்பவம் அப்படீன்னு சொல்லனும்னா, ஆக்டர் ஆயி 14 வருஷம் கழிச்சி ஒரு விஐபி-யை கண்டு பேட்டி காணும்னு சொன்னாங்க. நான் குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலையை சந்திக்கணும்னு திட்டமிட்டேன் அவர் சொன்னாரு. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. ஆனால் சிவகுமாருக்கு என்னுடைய நன்றிய சொல்லுங்க. குமுதம்தான் தலையே தவிர எஸ் ஏ பி எல்லாம் வெறும் உடல்தான். மன்னிக்கனும் நான் யாருக்கும் பேட்டியெல்லாம் தர்றதில்லனுட்டாரு.

அடுத்த சாய்ஸ் கேட்டபோது நான் கோபுலுன்னு சொன்னேன். ஏன்னா நான் நாலு வயது பையனா இருக்கும்போது, ஆனந்த விகடன் தீபாவளி மலர்ல கோபுலு, மணியம், சிற்பி இவங்க ஓவியம் எல்லாம் பார்த்திருக்கேன். சென்னை வந்து ஏழு வருஷம் ஓவியம் படிக்கும்போதுகூட கோபுலுவை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படல. நடிகனாகி 14 வருஷத்துக்கு அப்புறம் பொம்மை பத்திரிகைக்காக கோபுலுவை பேட்டி காண்பதற்காக அப்பாயின்ட்மென்ட் வாங்கி தந்தாங்க.

நான் ஒரு ஆக்டர் என்ற அடிப்படையில உங்கள பேட்டி காண கஷ்டமா இருக்கு சார். நான் வரைந்த ராதா கிருஷ்ணன் ஓவியம், மகாத்மா காந்தி ஓவியம், தஞ்சாவூர் கோயில் ஓவியம் இதையெல்லாம் காட்டினேன். தஞ்சை கோயில் சார். அங்கயே எட்டு மணி நேரம் ஸ்பாட்லயே உக்காந்து வரைஞ்சது. இது மதுரை கோயில் சார். பத்து மணி நேரம் அங்கயே உக்கார்ந்து வரைஞ்சது. இது மகாத்மா காந்தி ஓவியம். அப்படியே ஒன்ணு ஒன்ணா காட்டும்போது... அவர் அப்படியே என்னுடைய வலது கைய வாங்கி அவர் கைக்கு மேல வச்சிகிட்டாரு. ஓ வாட் ய வொண்டர்புல் ஹேண்ட் என்றார். உடனே என் கண் கலங்கிடுச்சி.

என்ன என்னன்னு கேட்டாரு. சாகும்வரை ஓவியரா இருந்துதான் சாகனும் என்றிருந்தேன். பாதை மாறி நடிகனாகி வந்து 14 வருஷம் ஆயிடுச்சி. பாதை தவறி விட்டேனோன்னு அப்படீன்னு ஒரு வருத்தம் இருக்கு சார்.

இல்ல இல்ல நீங்க சரியான முடிவுதான் எடுத்தீங்க. இந்த நாட்டுல ஓவியருக்கு மரியாதை கிடையாது. நீ ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கியிருக்க முடியாது. ஸ்கூட்டர் வாங்கினா பெட்ரோல்கூட போட்டுக்க முடியாது. அப்படிப்பட்ட நாடு இது. ஒண்ணும் குறைச்சல் இல்ல. முடிஞ்ச அளவுக்கு நடிங்க. நடிச்சதுபோதும்னு தோணிச்சுன்னா பழையபடி பிரஷ் எடுத்து அழகா வரையலாம். அப்படீன்னு சொன்னாரு. அது ஒரு சந்தோஷமான தருணம்.

Part I  Part II  Part III  Part IV

V i d e o s

More Interviews September 11th, 2008

Previous:    Interview of the week: DR. V MOHAN


More Interviews
Flowers - Many Congratulations R

Online Homeopathy Consulting!
BSE/NSE Live
Horoscope with 10 Year's Prediction
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera