தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  Personality
 in     
 
 
 
இந்த வார பிரபலம் - நீல பத்மநாபன் Interview of the Week
ஹெச் ராமகிருஷ்ணன்  
INTRO: அண்மையில் சாகித்ய அகாடமியின் விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் நீல பத்மநாபன் (வயது 70) திருவனந்தபுரத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே இருந்து வருகிறார். மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். சென்னை ஆன்லைனுக்காக ஹெச் ராமகிருஷ்ணன் அவரை தொலைபேசியில் பேட்டி கண்டதில் ஒரு தொகுப்பு..............

பள்ளிப்படிப்பின்போது தமிழிலும், மலையாளத்தில் மாறிமாறி கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பத்து வயதிலேயே எழுதத் துவங்கிவிட்டார். கையெழுத்து பத்திரிகை நடத்துவது, குழந்தைகளுக்கான சின்னஞ்சிறு கதைகளை படைப்பது, கவிதை எழுதுவது ஆகியவற்றில் அப்போதே ஈடுபட்டார். வீட்டில் முதியோர்கள் திருவிளையாடல் புராணம், கம்பராமாயணம் போன்றவற்றை படிப்பதை கேட்டு எழுத்தார்வம் பெற்றார். கல்லூரியைப் பொறுத்தவரையில் முதலில் இயற்பியலில் பட்டமும் பின்னர் மின்சாரப் பொறியியலில் பட்டமும் பெற்றார். பட்டம் பெற்ற கையோடு கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று அங்கேயே துணை முதன்மை பொறியாளர் ஆனார். சாதாரணமாக எழுத்தாளர்கள் இயற்பியலையோ, பொறியியலையோ தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் இவர் சின்ன வயதிலேயே வளவளவென்று எழுத விரும்பாதவர். எழுதியே ஆகவேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் மட்டுமே எழுதினார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதையே விரும்பினார். தேவையில்லாமல் வார்த்தைகளை விரையம் செய்யும் பழக்கம் கிடையாது.

கேள்வி: 1961-ல் திருவனந்தபுரம் வானொலியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தமிழ் நாடகப் போட்டியில் உங்களது ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றதே...?

பதில்: நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஒரு குறு நாவல் எழுதினேன். அப்போது வையாபுரி பிள்ளை திருவனந்தபுரத்தில் இருந்தநேரம். அப்போது அவரிடம் அதை கொண்டு போய் கொடுத்து, முன்னுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டேன். தானாக எழுதினாயா அல்லது திருடி எழுதினாயா என்று என்னிடம் கேட்டார். நான்தான் எழுதினேன் என்று கூறினேன். அவர், "இதை எழுதியவர் ஒரு பள்ளி மாணவன். தேவையற்ற சச்சரவுகளில் ஈடுபடுவதற்கு பதிலாக, நல்ல கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவணை ஊக்குவிப்பது நமது கடமை" என்று முன்னுரை எழுதிக் கொடுத்தார். அந்த காலத்திலேயே அதை அச்சிட்டு வெளியிட்டேன்.

பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது வானொலி நாடகப் போட்டியை பற்றி கேள்விப்பட்டு இன்ஜினியர் என்ற தலைப்பில் ஓரங்க நாடகத்தை எழுதினேன். என்னுடைய நண்பர்களை அதில் பங்குபெற வைத்து நானே தயாரித்தேன். தமிழ்நாட்டிலிருந்து வந்த பல நாடகங்களுடன் போட்டிபோட்டுக் கொண்டு எனது நாடகம் முதல்பரிசு வென்றது. எனது கல்லூரியிலும் எல்லோருக்கும் இதில் பெருமை ஏற்பட்டது.

கேள்வி: உங்களது முதல் நாவல்..?

பதில்: நான் பிஎஸ்சி முடிக்கும் தருவாயில் 'உதயதாரகை' என்ற ஒரு நாவல் எழுதினேன். தலைமுறைகள் என்பது என்னுடைய முதல் நாவல் என்று பலர் நினைக்கிறார்கள். அதற்கு முன்னதாக மூன்று நாவல்கள் எழுதியுள்ளேன். உதய தாரகையில் வரும் கதாநாயகன் வயதுதான் எனக்கும் இருந்தது. இதையடுத்து நேற்று வந்தவன் என்ற நாவலையும், யாத்திரை என்ற ஒரு நாவலையும் எழுதினேன். தலைமுறைகள் எனது நான்காவது நாவல்.

தலைமுறைகள் வெளிவரும்போது எனக்கு வயது 30. இந்த நாவலை எட்டு ஆண்டுகளில் எழுதி முடித்தேன். நான் ஒரு யக்ஞமாக எழுதிய நாவல் அது. இந்தியாவின் பத்து சிறந்த நாவல்கள் என்று கானா சுப்பிரமணியம் குறிப்பிட்டவையில் தமிழ் நாவல் இது ஒன்றுதான். அவரே அதை ஜெனரேஷன்ஸ் என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்த நாவல் ஜெர்மன் மொழியிலும் வெளிவந்தது.

கேள்வி: பள்ளிகொண்டபுரம்...

பதில்: 1970-ல் என்று நினைக்கிறேன். தலைமுறைகள் நாவலில் எனக்கு தெரிந்த சமூகத்தை பற்றி எழுதினேன். மக்களின் சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்க்கை முறைகள், நடைமுறைகள் இவற்றை பற்றி எழுதினேன். ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றித் தானே எழுதிக்கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். அடுத்த நாவலில் ஒரு நகரத்தை ஒரு நாவலின் நடுநாயகமாக்க முடியுமா என்ற எண்ணத்துடன் எழுதினேன். எனக்கு தெரிந்த ஒரு நகரம். ஆனால் எந்த இடத்திலும் அந்த நாவலில் திருவனந்தபுரம் என்று குறிப்பிடவில்லை. இந்த நாவலை தேசிய புத்தக நிறுவனம் எல்லா இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டது. அதன் பின் நான் எழுதியது உறவுகள் எனும் நாவல். இதற்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்தது. அந்த பரிசை எனக்கு எம்ஜிஆர்-தான் வழங்கினார். இந்த நாவலை ரிலேஷன்ஸ் என்று ஆங்கிலத்தில் சாகித்ய அகாடமி பிரசுரித்திருக்கிறது. இது மலையாளத்திலும் வந்திருக்கிறது.

தேரோடும் வீதி நாவலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு எந்தத் துறையிலும் முன்னேறுவதற்கு அனைவருக்கும் சமவாய்ப்பு இருப்பதாக நாம் சொல்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் ஏற்கனவே அந்தந்த துறைகளில் இருப்போர் புதியவர்களை வரவிடுவதில்லை. ஒரு எழுத்தாளனோ, இளம் விஞ்ஞானியோ, இளம் பாடகனோ முன்னுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. ஒரு இளம் எழுத்தாளன் தான் வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டம்தான் இந்த நாவலின் மையக் கருத்து.

கேள்வி: இலையுதிர் காலம் எப்படி எழுதினீர்கள்...?

பதில்: இது கடைசியாக வெளிவந்த நாவல். இதற்கு முன் கூண்டினுள் பட்சிகள் எனும் நாவலை எழுதினேன். இது ஆன்மீக கருத்துக்கள் நிறைந்த ஒரு நாவல். மனித வாழ்க்கையில் இருக்கக்கூடிய முரண்பாடுகள். நாம் நினைப்பதுபோல வாழ முடியாத நிலை. இத்தகைய எண்ணங்கள்தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டின. இந்த நாவல் எழுதிய பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நாம் எவ்வளவுதான் கரடியாக கத்தினாலும், வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும். ராமன் காலத்திலேயே ராவணன் இருந்தான். கண்ணன் காலத்திலேயே கம்சன் இருந்தான். வாழ்க்கை என்பது உள்ளது உள்ளபடி. ஆதலால் நாவல் எழுதுவதில்லை என்று கொஞ்ச காலம் முடிவு செய்திருந்தேன். ஆயினும் முதியோரின் பிரச்சினைகள் என்னை வாட்டி வாதைத்தன. ஏராளமானோருக்கு வெளியே சொல்ல முடியாத தர்மசங்கடங்கள். வயதான காலத்தில் குடும்பச் சுமைகள், குடும்ப துன்பங்கள், இதைப்பற்றிதான் இலையுதிர் காலத்தில் எழுதினேன்.

கேள்வி: நாவல்களை தவிர சிறுகதைகள்...?

பதில்: ஆம் ஏராளமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மலையாளத்திலும் எழுதியிருக்கிறேன். தமிழிலும் எழுதியிருக்கிறேன். தமிழில் கிட்டத்தட்ட 150 சிறுகதைகளும், மலையாளத்தில் 60 சிறுகதைகளும் வெளிவந்துள்ளன.

கேள்வி: வாழ்க்கை என்றால் என்ன உங்களைப்பொறுத்தவரையில்...?

பதில்: வாழ்க்கை என்பது ஒரு பிறவிக் கடன். நாம் கேட்டு வாங்கிப் பெற்றது அல்ல வாழ்க்கை. எப்படியோ ஒரு பிறவி எடுக்கிறோம். சில கால கட்டங்களில் நாம் அனைத்தையும் எந்திரகதியில் செய்து கொண்டிருக்கிறோம். அடிப்படையாக எல்லோருமே சில கடமைகளை செய்கிறார்கள். திருமணம் செய்து கொள்வது, வேலைக்கு போவது, குழந்தைகளை பெற்றுக் கொள்வது இப்படி எல்லோருடைய வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் மேல்..கடவுள் நமக்கு கண்ணுக்குப் புலப்படாத திறமையை கொடுத்திருக்கிறார். இதை ஜென்ம வாசனை என்றும் எடுத்துக் கொள்ளலாம். பாட்டுப் பாடுவதிலோ, ஓவியத்திலோ, கவிதை எழுதுவதிலோ, இலக்கியத் துறையிலோ இப்படி ஏதேனும் ஒரு துறையில் திறமை இருக்கும். வயிற்றுப் பிழைப்புக்காக நாம் ஏதேனும் ஒரு பணியில் இருந்தாலும்கூட, இந்தத் தனித் திறமைகளை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவோம். இது மனித வாழ்க்கைக்கு தேவைப்படுகிறது. இதனால் மனதிற்கு ஒரு இன்பமும் ஆன்மீக நிறைவும் கிடைக்கிறது. கர்மமார்க்கத்தில் நாம் இருந்தாலும்கூட, கர்மயோகத்தை நாம் புரிந்து கொண்டால் துன்பத்திற்கு இடமில்லை. நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். அவர் நன்றி சொல்லவில்லையே என்ற ஏக்கம்...! பிள்ளைகளை வளர்க்கிறோம் அவர்கள் நம்மை பராமரிக்கவில்லை..! இப்படிப்பட்ட கவலைகள் ஒரு கர்மயோகிக்கு ஏற்படாது. ஏன் என்றால் பலனை எதிர்பார்ப்பதில்லை. கர்மயோகமாக வாழ்க்கையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் கசப்புணர்வும், கோபமும், வெறுப்பும், ஏமாற்றமும் மிஞ்சும். ஆன்மீக உணர்வு என்றால் துறவு என்று அர்த்தமில்லை. நாம் நம்மையே புரிந்து கொள்வதுதான் அது. வாழ்க்கையை நிதானமாகவும், நிம்மதியாகவும் எதிர்கொள்வதற்கான ஒரு உத்திதான் ஆன்மீக உணர்வு.

கேள்வி: சிகரத்தை தொட்டுவிட்டீர்கள். இதற்கு மேல் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்..?

பதில்: நான் ஏற்கனவே கூறியதுபோல எதையாவது எழுதவேண்டும் என்று நான் ஒருபோதும் எழுதியதில்லை. மனதில் தோன்றும் ஒரு உந்துதலின்பேரில்தான் நான் எழுதுகிறேன். பல எண்ணங்கள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வருவேன் என்று நினைக்கிறேன்.

More Published on March 13th , 2008


Recommend this page

Mail us your feedback

More Interviews

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera